நெல் சந்தைப்படுத்தும் சபை 22,000 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்துள்ளதாக அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்தார்.
இதுவரையில் அம்பாறை மாவட்டத்தில் 5,200 மெற்ரிக் தொன் நெல்லும் அநுராதபுரம் மாவட்டத்தில் 2,500 மெ.தொ, கிளிநொச்சி மாவட்டத்தில் 2,300 மெ.தொ, முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,700, வவுனியா மாவட்டம் 2,000, மட்டக்களப்பு மாவட்டம் 1,700 மெ.தொ, அம்பாந்தோட்டை 2,370 என்ற அடிப்படையில் நெல் சந்தைப்படுத்தும் சபை இந்த இரண்டு வகையான நெல்லைக் கொள்வனவு செய்திருப்பதாக தெரிவித்தார்.
நெல்லைக் கொள்வனவு செய்துள்ள நெல் சந்தைப்படுத்தும் சபை அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்திலிருந்து மட்டும் 393 மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்திருப்பதாகவும் இதுவே ஒரு பிரதேசத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆகக்கூடிய தொகையென்றும் அவர் கூறினார்.
சம்பா நெல் ஒரு கிலோ 41 ரூபாவாகவும் நாடு நெல் ஒரு கிலோ 38 ரூபாவாகவும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாவட்டத்திலிருந்தே ஆகக்குறைந்த நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அது 200 மெற்றிக் தொன்னாகும். இதற்கு காரணம் அந்த பிரதேசத்திலுள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடவும் ஒரு ரூபா கூடுதல் விலைக்கு நாடு நெல்லை கொள்வனவு செய்துள்ளதாக நெல் கொள்வனவு சந்தைப்படுத்தும் சபை தெரிவிக்கின்றது.