அக்னி சிறகுகள், கொலைகாரன் படங்களை தொடர்ந்து, விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவியை வைத்து தாஸ் என்கிற படத்தை இயக்கிய பாபு யோகேஸ்வரன் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கிறார். அதிரடி போலீஸ் கதையாக உருவாகி வரும் இந்தப்படத்தில் முக்கியமான டாக்டர் வேடத்தில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி நடிக்கிறார்.
கடந்த 2௦15ல் ஷங்கர் டைரக்சனில் ‘ஐ’ படத்தில் வில்லனாக இதேபோன்று ஒரு டாக்டர் வேடத்தில் தான் சுரேஷ்கோபி நடித்திருந்தார். அதுமட்டுமல்ல, அதே வருடத்தில் இன்னும் சில மலையாள படங்களில் நடித்த சுரேஷ்கோபி, கடந்த நான்கு வருடங்களாக படம் எதிலும் நடிக்கவில்லை.. அந்த வகையில் ஒரு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தமிழில் தான் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்தப்படத்தில் பூமிகா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.