கனடாவின் நிதியமைச்சர்களிடையே எட்டப்பட்ட ஓய்வூதியத் திட்ட விரிவாக்க ஒப்பந்தம்
கனடாவின் ஓய்வூதியத் திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்து நிதியமைச்சர்களிடையே ஏழு ஆண்டுகளின் பின்னர் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தமானது எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் குறித்து நிதியமைச்சர் பில் மோரினியூ நேற்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளார். ஓய்வூதியத் திட்ட விரிவாக்கம் குறித்து மத்திய, மாகாண மற்றும் பிராந்திய நிதியமைச்சர்கள் மட்டத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால் அதற்கான போதிய ஆதரவு கிடைக்காமல் திட்டம் தோல்வி அடைந்து வந்த நிலையில் தற்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
தற்போதைய ஓய்வூதிய திட்டத்தின் பிரகாரம், 3 ஆயிரத்து 500 முதல் 54 ஆயிரத்து 900 அமெரிக்க டொலர் வருமானத்தில் வேலைதருனர்களும், ஊழியர்களும் 4.95 வீத பங்களிப்பை செலுத்த வேண்டியுள்ளது. அதாவது 55 ஆயிரம் அமெரிக்க டொலர் வருமானம் பெறுவோர் மாதாந்தம் 7 அமெரிக்க டொலர் செலுத்த வேண்டும். ஆனால் இந்த தொகை 2023ஆம் ஆண்டுக் காலப்பகுதி அளவில் மாதாந்தம் 34 அமெரிக்க டொலராக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.