மின் இணைப்பில் இருந்தபோது அழைப்பை ஏற்ற பெண் கைப்பேசி வெடித்து பலி!
தெலுங்கானா மாநிலம், கரிம்நகர் மாவட்டதில் சார்ஜரில் இருந்த செல்போனை எடுத்துப் பேசிய 28 வயது பெண் செல்போன் திடீரென்று வெடித்த விபத்தில் முகம் சிதைந்து உயிரிழந்தார்.
தெலுங்கானா மாநிலம், கரிம்நகர் மாவட்டத்தில் உள்ள சிடாப்பூர் மண்டலத்தில் வசித்துவந்த 28 வயதான விமலா என்பவர் தனது கைப்பேசியை சார்ஜரில் போட்டுவிட்டு வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அவரது கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. சார்ஜரில் இருந்த இணைப்பை அகற்றாமல் கைப்பேசியை எடுத்து பேச முயன்றபோது திடீரென்று பயங்கர சப்தத்துடன் அந்த கைப்பேசி வெடித்து சிதறியது.
இந்த சம்பவத்தில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே விமலா உயிரிழந்தார். இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு பெண் அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.