ஆச்சர்யம் ஆனால் உண்மை: முதலாளியை கொன்ற கொலையாளியை காட்டிக் கொடுத்த கிளி
அமெரிக்க நாட்டில் முதலாளியை சுட்டுக் கொன்ற கொலையாளியை அவர் வளர்த்து வந்த கிளி ஒன்று பொலிசாருக்கு அடையாளம் காட்டியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிச்சிகன் மாகாணத்தில் உள்ள Ensley நகரில் மார்ட்டின் துரம் மற்றும் கிலென்னா என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக காணப்படும் சாம்பல் நிறத்தில் உள்ள கிளி ஒன்றை மார்ட்டின் தனது வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மே மாதம் அவசர தகவல் ஒன்றை பெற்ற பொலிசார் மார்ட்டின் வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு, உடல் முழுவதும் 5 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் மார்ட்டின் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
அருகில் மார்ட்டினின் மனைவியான கிலென்னா தலையில் குண்டு காயம் பட்டு உயிருக்கு போராடியுள்ளார்.
கிலென்னாவை மீட்டு பொலிசார் மருத்துவமனையில் சேர்த்ததால் அவர் தற்போது குணமாகி வருகிறார்.
இந்த சம்பவம் நடைபெற்ற இரண்டு வாரங்களுக்கு பிறகு மார்ட்டினின் தந்தை கொலை நடந்த வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த அந்த சாம்பல் நிறக்கிளி அடிக்கடி எதையோ கூறி கத்திக்கொண்டு இருந்துள்ளது.
கிளியின் முனகலை அவர் கூர்ந்து கவனித்தபோது, ‘Don’t shoot’( தயவு செய்து சுடாதே) என்ற வார்த்தைகளை அந்தக் கிளி அடிக்கடி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதாவது, மார்ட்டினை துப்பாக்கியால் சுட்டபோது அவர் கடைசியாக Don’t shoot என்ற வார்த்தைகளை தான் பேசியுள்ளார். இதனை அருகில் இருந்த அந்த சாம்பல் நிறக் கிளி கேட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த சாம்பல் நிறக்கிளிகளுக்கு சாதாரண கிளிகளைவிட அறிவு கூர்மையானது.
ஏதாவது ஒரு ஒலியை கேட்டால், அதனை அப்படியே திருப்பி பேசும் திறன் படைத்தது.
குறிப்பாக, ஒரு ஒலியை ஒருமுறை கேட்டால் கூட அதனை அப்படியே இந்த கிளிகள் திரும்ப கூறும்.
எனவே, மார்ட்டினை சுட்டபோது இந்த கிளியும் அந்த இடத்தில் இருந்துள்ளது.
மார்ட்டினின் உடல் அருகில் அவரது மனைவியான கிலென்னாவும் குண்டு காயத்துடன் இருந்ததால் அவர் தான் மார்ட்டினை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் என பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
ஆனால், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிலென்னா ‘சம்பவம் நிகழ்ந்தபோது எனக்கு என்ன ஆனது என்பது பற்றி எந்த நினைவும் இல்லை’ என பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், கொலை நடந்த இடத்தில் கிலென்னா எழுதியிருந்த 3 தற்கொலை கடிதங்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.
ஒரு கடிதத்தை கிலென்னாவின் முன்னாள் கணவருக்கும், மற்ற 2 கடிதங்களை அவரது இரு மகள்களுக்கும் எழுதியுள்ளார்.
அதில், ‘மகள்களே, என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் இருவரையும் நான் உயிருக்கு உயிராக நேசிக்கிறேன்.
ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக உங்கள் இருவருக்கும் நான் ஏமாற்றத்தை மட்டுமே தந்துள்ளேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என உருக்கமாக எழுதியுள்ளார்.
இந்த கடிதங்கள் மற்றும் மார்ட்டினின் தந்தை தற்போது பொலிசாரிடம் கிளி பேசியதாக கூறப்பட்டுள்ள அந்த புகாரை பதிவு செய்துள்ளனர்.
இந்த புகார்களின் அடைப்படையில், மார்ட்டினின் கொலையில் அவரது மனைவியான கிலென்னாவிற்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதால் அவரை விரைவில் விசாரணை வட்டத்தில் கொண்டு வரவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.