கனவு வீடு சாம்பலானது – மனமுருகும் குடியிருப்பாளர்
கனவு வீடு வெறும் சாம்பலாக காணப்படுவதாக அல்பேட்டாவின் ஃபோர்ட் மக்முர்ரே பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் தன்னுடைய வீட்டினை இழந்த குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஃபோர்ட் மக்முர்ரேயில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயினால் சுமார் 90 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த பாரிய காட்டுத்தீயினால் அந்த நகரில் இருந்த 25 ஆயிரம் கட்டிடங்களில், வீடுகள் உட்பட சுமார் 2,400 கட்டிடங்கள் எரிந்து நாசமாகின.
இவ்வாறிருக்க குறித்த பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற மக்கள் தமது வீடுகளுக்கு செல்வதற்கு நேற்று முன்தினம் முதல் மாநில அரசினால் அனுமதி வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் தன்னுடைய கனவு வீட்டினை பார்பதற்காக சென்றிருந்த குடியிருப்பாளர் ஒருவர் வீடு வெறும் சாம்பலாக காணப்படுவதை பார்த்து அதிர்ந்து போயுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ இது என்னுடைய முதலாவது வீடு, என்னுடைய குழந்தைகள் விளையாடுவதற்காக பெரியளவு இடத்தினை வெட்டவெளியாக கொண்டு இருமாடி வீடாக கட்டியிருந்தேன்.
கடந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு சற்று முன்னரே இந்த வீட்டினை காட்டி என்னுடைய மனைவியை ஆச்சரியப்படுத்தியிருந்தேன்.
ஐந்து மாதங்கள் கழிந்து என்னுடைய வீட்டில் வெறும் சாம்பலும், இடிந்த துண்டுகளுமே எஞ்சியுள்ளன.’ என மனமுருக தெரிவித்துள்ளார்.
மேலும், ஒன்பது வருடங்களின் பின்னர் என்னுடையதும் எனது குடும்பத்தினரும் கனவுகளை நனவாக்குவதாக இந்த வீட்டினை வாங்கியிருந்தேன்.
நானும் என்னுடைய குழந்தைகளும் சொந்த வீட்டில் இருக்க வேண்டும் என்ற ஆசை அன்று நிறைவேறியது.
ஐந்து மாதங்களில் அது நிராசையானது.’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.