இந்தியாவில் 11வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. நேற்றைய லீக் போட்டி கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. கடந்த 7 ஆண்டுகள் கோல்கட்டா கேப்டனாக களமிறங்கிய காம்பிர், நேற்று டில்லி அணிக்காக ‘டாஸ்’ வென்று, பீல்டிங் தேர்வு செய்தார்.
ராணா அபாரம்
கோல்கட்டா அணிக்கு சுனில் நரைன் (1) கிறிஸ் லின் ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. உத்தப்பா (35), லின் (31) சற்று உதவினர். பின் வந்த ராணா, ரசல் சிக்சர் மழை பொழிந்தனர். ரசல், 12 பந்தில் 41 ரன்கள் (6 சிக்சர்) எடுத்தார். ராணா (59 ரன், 4 சிக்சர்), அரைசதம் அடிக்க, கோல்கட்டா அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு, 200 ரன்கள் எடுத்தது.
நரைன் ‘100’
கடின இலக்கைத் துரத்திய டில்லி அணிக்கு எதுவும் சரியாக அமையவில்லை. ஜேசன் ராய் (1), ஸ்ரேயாஸ் (4), காம்பிர் (8), ஒற்றை இலக்க ரன்கள் எடுத்தனர். பன்ட் (43), மேக்ஸ்வெல் (47) என, இருவரும் சற்று உதவினர். மோரிசை (2) போல்டாக்கிய நரைன், ஐ.பி.எல்., அரங்கில் 100வது விக்கெட் வீழ்த்தினார். இந்த இலக்கை எட்டிய 3வது பவுலர் இவர்.விஜய் ஷங்கர் (2), ஷமி (7) என, பின் வரிசையில் யாரும் நிலைக்கவில்லை. கடைசியில் போல்ட் (0) அவுட்டாக, டில்லி அணி 14.2 ஓவரில், 129 ரன்னுக்கு சுருண்டது. 71 ரன்கள் வித்தியாசத்தில், கோல்கட்டா அணி, தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. கோல்கட்டாவின் சுனில் நரைன், குல்தீப் யாதவ், தலா 3 விக்கெட் சாய்த்தனர்.