ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான போட்டியில், முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.
Photo: Twitter/IPL
ஐ.பி.எல் 11 வது சீசனில் இன்று 13 வது போட்டியில் கொல்கத்தா அணியும் டெல்லி அணியும் மோதின. கொல்கத்தாவின் ஈடன் காரடன் மைதானத்தில் இரவு 8 மணிக்குத் துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் கம்பீர் பந்துவீச முடிவு செய்தார்.
அதன்படி, கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டகாரர்களாக கிரிஸ் லின் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களமிறங்கினர் . டெல்லி அணியின் ட்ரெண்ட் போல்ட் மற்றும் மோரிஸ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக ரன்கள் சேர்க்க கொல்கத்தா அணி திணறியது. சுனில் நரைன் 1 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்துக் களமிறங்கிய உத்தப்பா அதிரடியில் இறங்கினார். அவர் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து, நதீம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் தினேஷ் கார்திக் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடி வீரர் ரஸல் களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய ரஸல், 12 பந்துகளில் 6 சிக்ஸர்கள் உதவியுடன் 41 ரன்கள் குவித்தார். அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. ரஸலுடன் இணைந்து டெல்லி பௌலர்களைச் சோதித்த, நிதிஷ் ராணா அரைசதம் அடித்தார். அவர் 35 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ட்ரண்ட் போல்ட் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 4 ஓவர்கள் வீசி 53 ரன்கள் விட்டுக் கொடுத்தார். டிவாட்டியா வீசிய கடைசி ஓவரில் 1 ரன் மட்டும் கொடுத்து 3 வெக்கெட்டுகள் சாய்த்தார். அதேபோல், ட்ரண்ட் போல்ட் வீசிய முதல் ஓவர் மெய்டன் என்பது குறிப்பிடத்தக்கது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களைக் குவித்தது.