திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நேற்று காலை முதல் அசாதாரண செயற்பாட்டை வெளிப்படுத்தியவர்களுள் 24 பேர் தெல்தெனிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
2000 இற்கும் அதிகமானவர்கள் நேற்று நண்பகல் வேளை திகன நகர் மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளுக்கு பலவந்தமாக பிரவேசித்து முஸ்லிம்களின் மதஸ்தலங்கள், முஸ்லிம்களின் கடைகள் மற்றும் முஸ்லிம்களின் வீடுகள் பலவற்றுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.
இவ்வாறு கலகம் ஏற்படும் விதத்தில் செயற்பட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் தண்ணீர்ப் பிரயோகம் என்பனவற்றைப் பிரயோகித்துள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இத்தகையவர்கள் வன்முறையில் ஈடுபட்டு பாதையில் வரும் வாகனங்களுக்கும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
தெல்தெனிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 10 பேர் பல்லேகல பொலிஸ் நிலையத்திலும், 14 பேர் மெனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்திலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.