நாடெங்கிலும் உள்ள வேலைதேடும் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு ஆறு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வும், பாடசாலைகளுக்கு விஞ்ஞான உபரகணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று காலை நடைபெற்றுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்தாவது-ஒரு மாதத்திற்கு முன்பாக நான் மட்டக்களப்பிற்கு வந்தபோது கிழக்கு மாகாண பட்டதாரிகள் தமது பிரச்சினைகளை எனக்கு தெரிவித்தனர். அன்று நான் மட்டக்களப்பில் இருந்து பொன்னறுவைக்கு வாகனத்தில் செல்லும்போது தொலைபேசியில் ஆளுநரை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி தேர்தல் முடிந்த பின்னர் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தேன்.
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல முழு இலங்கைக்குமான பிரச்சினையாக இருக்கின்றது. ஏழு மாதங்களுக்கு முன்பாக பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அந்த காலத்தில் தேர்தல் வந்ததன் காரணமாக நேர்முகத்தேர்வினை அனைவருக்கும் நடத்த முடியாத சூழ்நிலையேற்பட்டது.
அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு மிகப்பட்டு இலங்கை முழுவதிலும் உள்ள பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கு வெகுவிரைவில் நடவடிக்கையெடுக்கப்படும். அரசு வழங்கும் இவ்வாறான நியமனங்களுக்கு மேலாகவே மாகாணசபைகள் நியமனங்களை வழங்குகின்றது
இலங்கையில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் எதிர்வரும் 06 மாதங்களுக்குள் அனைவருக்கும் நியமனங்களை வழங்குவேன்.- என்றார்.