வடக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு முதலாம் தவணைப் பரீட்சை நிறைவடைந்ததுடன் கட்டாய இடமாற்றங்கள் வழங் கப்படவுள்ளன. இங்குள்ள அரசியல்வாதிகள் யாருக்கும் பரிந்துரை செய்து அதைக் குழப்பாதீர்கள்.
இவ்வாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இணைத் தலைவர்களான வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கல்வி சார்ந்த விடயங்கள் பேசப்பட்டன. அதன்போதே வடக்குக் கல்வி அமைச்சர் இவ்வாறு கூறினார்.
“வடக்கு மாகாணத்தில் இதுவரை காலமும் இடமாற்றம் செய்யப்படாத மேலதிகமாக உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. இடமாற்றம் வழங்கப்படும் போது இங்குள்ள அரசியல்வாதிகள் ஆசிரியர்களுக்காகப் பரிந்துரைகள் செய்து நடைமுறையைப் குழப்பி விடாதீர்கள். அவர்களை அனைத்து இடங்களிலும் சேவையாற்ற விடுங்கள். அனைத்து பிரதேச மக்களுக்கும் கல்வியை சிறப்பாகப் பெறவிடுங்கள்”- என்று அவர் கூறினார்.
“தேசிய பாடசாலைகளில் சிலவற்றில் அதிகமான ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும். மீள்குடியமர்த்த பகுதிகளில் அதிபர்களுடன் மட்டுமே பாடசாலைகள் இயங்குகின்றன. அந்த பாடசாலைகளின் பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும்.”- என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெயசேகரம் சுட்டிக்காட்டினார்.
இடமாற்றக் கொள்கை முதலாம் தவணையுடன் நடைமுறைப்படுத்தப்படும். அப்போது வடக்கில் உள்ள அனைத்துப் பாடசாலை களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று வடக்கு கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.