ஆயுதம் தாங்கிய புலிகளுக்கே அஞ்சாத நானும், எனது மாவட்ட மக்களும் பௌத்த இனவாதக் குழுக்களுக்கு ஒரு போதும் அஞ்சப்போவதில்லை. இவ்வாறு பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
அம்பாறை வன்முறையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரும், இரண்டு நாள்களில் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது-,
அம்பாறையில் அதிகாரமிக்க சிங்கள அரசியல்வாதிகளின் ஆதரவுடன், பொலிஸாரின் நெறிப்படுத்தலின்கீழ், அம்பாறை பள்ளிவாசலைத் தாக்கிய பௌத்த சிங்கள இனவாதிகள் வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நல்லாட்சியை நம்பிய, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே இதை நோக்குகிறேன்.
அம்பாறை மாவட்ட தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் காணப்பட்டனர். ஒரு சிறிய இனவாத கூட்டத்தை திருப்திப்படுத்துவதற்காக முஸ்லிம்களுக்கு கொடுமை செய்து, பள்ளிவாசல் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை அரசு மறைமுகமாக விடுதலை செய்துள்ளது.
முஸ்லிம்களை அரசு ஏமாற்றியுள்ளது. இதற்கான பயனை மிகவிரைவில் இந்த அரசு அடையும். அதற்கான அதிர்ச்சி வைத்தியத்தை இந்த அரசுக்கு நாங்கள் கொடுப்போம்.எனது மாவட்ட முஸ்லிம் இளைஞர்கள் கொதித்துப் போயுள்ளனர். அவர்களை நானும், பள்ளிவாசல் நிர்வாகங்களும் அமைதிப்படுத்தி வைத்திருக்கிறோம். ஆயுதம் தாங்கிய புலிகளுக்கே அஞ்சாத நானும், எனது மாவட்ட மக்களும் பௌத்த இனவாதக் குழுக்களுக்கு ஒரு காலமும் அஞ்சப்போவதில்லை.
பலதொழில்நுட்பங்கள் உள்ள நிலையில், மறைகாணியின் (சி.சி.ரி.வி) துணையுடன் பள்ளிவாசலை தாக்கியவர்களை மிக இலகுவில் கைது செய்திருக்கலாம். அவ்வாறில்லாமல் அவர்களைச் சிறைவைக்காது ஒரு சுதந்திரப் பறவைகளாக பறக்க விட்டுள்ளனர்.
தற்போதை நல்லாட்சி அரசை பௌத்த சிங்கள இன வாதிகளே வழி நடத்துகின்றனர். அதனால்தான் முஸ்லிம் விவகாரங்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன. எனது கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி அடுத்த கட்ட நடவடிக்கையை மிக விரைவில் அறிவிப்போம் – என்றார்.