வல்லை முனியப்பர் கோவிலடியை அண்மித்த இடத்தில் நேற்று இரவு 6.45 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். துவிச்சக் கர வண்டியில் பயணித்தவரே உயிரிழந்தார். உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை.
சுமார் 56 வயது மதிக்கத்தக்கவர் என்று தெரிவிக்கப்பட்டது. அவரை முச்சக்கர வண்டி மோதியது என்று கூறப்படுகின்றது. முச்சக்கரவண்டி ஒன்று அந்த இடத்தில் தடம்புரண்டு தலைகீழாக புரண்டிருந்தது. அதன் சாரதியை தள்ளாடியவாறு நின்றார் என்றும், பின்னர் அவரைக் காணவில்லை என்றும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறினர்.
துவிச்சக்கர வண்டியில் பயணித்தவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. அவர் அசைவற்ற நிலையில் அச்சுவேலி மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துவிட்டமை உறுதிப்படுத்தப்பட்டது. குருதிப் பெருக்கால் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. நெல்லியடிப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.