மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. உள்ளூராட்சித் தேர்தலில் கலப்பு முறை உருவாக்கப்பட்டது. இதற்காக வட்டாரங்களின் எல்லை நிர்ணயம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் நடை பெறும் சகல தேர்தல்களிலும் கலப்புத் தேர்தல் முறையைப் பயன்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது.
இதற்கு அமைவாக, மாகாணசபைகளுக்கான எல்லை நிர்ணயப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் 5 உறுப்பினர்களைக் கொண்ட எல்லை நிர்ணயக் குழு நியமிக்கப்பட்டது.இந்தக் குழு ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று கருத்துக்களை நேரடியாகக் கேட்டறிந்து எல்லை நிர்ணய அறிக்கையைத் தயாரித்துள்ளது. எல்லை நிர்ணய அறிக்கை, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் ஆணைக்குழுவினரால் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டது.
குழுவின் தலைவர் கலாநிதி கே.தவலிங்கம் ஏனைய உறுப்பினர்களான பேராசிரியர் எஸ்.எச்.ஹிஸ்புல்லா, கலாநிதி அனிலாடயஸ் பண்டாரநாயக்க, பிஎம்.சிறிவர்த்தன, எஸ்.விஜயசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.