பொதுக்கூட்ட மைதானத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்த நடிகர் கமல், ரசிகர் மத்தியில் தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். அரசியல் கட்சியின் பெயர் “மக்கள் நீதி மய்யம்’’ என ரசிகர்கள் மத்தியில் அவர் அறிவித்தார்.
தூய வெள்ளையில் இணைந்த கைகள்!’ – பொதுக்கூட்ட மைதானத்தில் கொடியேற்றிய கமல்!
மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்று வரும் அரசியல் பிரகடன மேடைக்கு கமல்ஹாசன் வந்தார். அவருடன் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் மேடைக்கு வந்துள்ளனர். பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்கு முன்பாக பொதுக்கூட்ட மைதானத்தில் அவரது கட்சிக் கொடியை கமல் ஏற்றிவைத்தார். விஸ்வரூபம் படத்தின் யாரென்று தெரிகிறதா பாடல் இசை பின்னணியில் ஒலிக்க கமல், தனது அரசியல் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சந்திப்பு: மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்ட மேடைக்குச் செல்வதற்கு முன்பாக அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர்கள் இருவரும் ஒரே காரில் பொதுக்கூட்ட மேடைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
மதுரை செல்லும் வழியில் திருப்புவனத்தில் பொதுமக்கள் திரண்டு நிற்க அங்கு காரில் இருந்தபடியே ஒரு நிமிடம் பேசினார் நடிகர் கமல்ஹாசன். அப்போது அவர், “திருப்புவனம் எப்போதுமே வளமான ஊர். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊர். இந்த ஊருக்கும், இங்கே இருக்கும் இளைஞர்களுக்கும் முக்கியமான திட்டம் வைத்திருக்கிறேன். அதை இங்கு சொல்லவில்லை.ஒத்தக்கடை கூட்டத்தில் அறிவிக்கிறேன் அங்கே வாருங்கள்,” என்றார்.