கிளிநொச்சியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஷாப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தால் 15 மாத காலப்பகுதியில் இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஷாப் (SHARP) நிறுவன முகாமையாளார் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஷாப் (SHARP) நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்கும் ஜப்பான் நாட்டின் இலங்கைப் பிரதிநிதி செல்வி நிறோசா வெல்கம, உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஷாப் (SHARP) நிறுவனத்தின் பளை அலுவலகம் மற்றும் கண்ணி வெடி அகற்றும் பகுதிகளை பார்வையிட்டார்.
இதன் போது நிறுவனத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முடிவடைந்த வேலைத் திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து வெளியிடும் போது,
இந்த நிறுவனமானது கடந்த 15 மாத காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் மூன்று இலட்சத்து ஒன்பதாயிரத்து இருநூற்று அறுபது சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து, இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளது. தொடர்ந்தும் முகாமாலை, கிளாலி பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம் என்றும் குறிப்பட்டார்.
ஜப்பான் அரசாங்கம் மற்றும் ஜப்பான் நாட்டு மக்களிடமிருந்து பெறப்பட்ட 9.8 பில்லியன் ரூபா நிதியுதவியுடாக குறித்த பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.