கூட்டரசின் பயணம், அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் கூட்டு அரசின் அமைச்சரவைக் கூட்டம் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுக் கூடியது. அதில் சமகால அரசியல் நிலைவரங்கள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
அதன்பின்னர் மத்திய அதிவேக நெடுஞ்சாலை மறுசீரமைப்புத் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைத்தவேளை, அமைச்சர் சம்பிக்க ரணவக்க கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
“நாட்டுக்கு என்ன அபிவிருத்தி தேவை, மக்களின் இதயங்களை எவ்வாறு வெல்லலாம், மக்கள் விரும்பும் அபிவிருத்தி எது என்பன தொடர்பிலேயே நாம் கவனம் செலுத்த வேண்டும். கண்ணுக்குப் புலப்படாத அபிவிருத்திகளை செய்யப்போய்தான் தேர்தலில் வாங்கிக்கட்டிக் கொண்டோம். இனியும் அந்தத் தவறை செய்யமுடியாது”- என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.அவரின் கருத்துக்கு சார்பாக மகிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இவர்களின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல உரையாற்றினார். அவருக்குச் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
கூட்டரசின் பயணம் தொடர்பாகவும் அமைச்சர்களுக்கிடையே சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன என்று தெரியவருகின்றது.கூட்டரசின் பயணம், அமைச்சரை மாற்றம், தலைமை அமைச்சர் பதவி என்பன குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.