நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகர சபையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பெற்றுக் கொண்ட இரண்டு ஆசனங்களுக்குமான உறுப்பினர்களை, சுழற்சி முறையில் நியமனம் செய்ய ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டடுள்ளது என, அக்கட்சியின் ஏறாவூர் மத்திய குழு தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம், ஏறாவூர் நகர சபையில் கிடைக்கப் பெற்றுள்ள இரண்டு பட்டியல் ஆசனங்களையும், குறித்த உறுப்பினர்கள் மத்தியில் சுழற்சி முறையில் வழங்கப்படவுள்ளது.
அதில் முதலாவது ஆசனத்தை, தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய வேட்பாளர்கள் மத்தியில், வட்டார ரீதியாக பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை ஒழுங்கின் அடிப்படையில் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஆசனத்தை, பட்டியல் நியமனத்துக்காக ஏற்கெனவே வேட்புமனுப் பத்திரத்தில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களுக்கு, சுழற்சி முறையாக வழங்குவது எனவும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பாக, கட்சி உயர் மட்டத்துக்குக் கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட அமைப்பாளர் சுபைர் ஊடாக, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆலோசனையின் பிரகாரம் மேற்கொண்டு வருவதாக, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஏறாவூர் மத்திய குழுவின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏறாவூர் நகர சபைக்காக கைச்சின்னத்தில், முன்னாள் மாகாண அமைச்சர் சுபைர் தலைமையில் களமிறங்கிய சுதந்திரக் கட்சி அணி, வட்டார ரீதியாக ஓர் ஆசனத்தை வெற்றி கொண்டதுடன், பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் பிரகாரம், விகிதாசார அடிப்படையில், இரண்டு ஆசனங்களுமாக 3 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.