14 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளைச் சேமித்து வழங்கக் கூடிய நான்கு பெரும் கொள்கலன்கள் விரைவில் காங்கேசன்துறையில் நிறுவப்பட்டு வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் எரிபொருள் வழங்கல் இடம்பெற நடவடிக்க எடுக்கப்படும்.
இவ்வாறு கொழும்பு பெற்றோலிய அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்த அமைச்சர் வடக்கு மாகாண எரிபொருள் வழங்குநர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணம் பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தெரிவித்தாவது,
–
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைப் பகுதியில் எரிபொருளை சேமித்து வைத்து வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் எரிபொருளை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். காங்கேசன்துறையில் 6 ஏக்கர் நிலப்பரப்பு எமக்குக் கிடைத்துள்ளது. நாம் பத்து 10 ஏக்கரைக் கோரியிருந்தபோதும் பகுதியளவு நிலமே கிடைத்துள்ளது.
எமக்கு கிடைத்துள்ள இடத்தில் 14 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை சேமித்து வழங்கத் தீர்மானித்துள்ளோம். இந்தத் திட்டத்தை இந்த நாடு இறுதிக்குள் நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
7 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோல் தாங்கி ஒன்றும், ஐந்து மெற்றிக் தொன் டீசல் தாங்கி ஒன்றும் மேலதிகமாக ஒவ்வொரு மெற்றிக் தொன் தாங்கிகள் இரண்டும் என மொத்தமாக நான்கு தாங்கிகள் அமைக்கப்பட்டு மொத்தமாக 14 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருள்களை சேமித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காங்கேசன்துறை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த எரிபொருள் தாங்கிகளுக்கு சிறிய கப்பல்கள் ஊடாக எரிபொருள்களை நிரப்ப உத்தேசித்துள்ளோம்.இந்த சேமிப்பு தாங்கிகள் ஊடாக மிகக் குறைந்த செலவில் வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் எரிபொருள்களை வழங்க முடியும்.- என்றார்.