சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஊழலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளால் இதுவரை 132 பில்லியன் டாலர் வசூலிக்கப்பட்டுள்ளதாம்.
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான் கடந்தாண்டு இறுதியில் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றார். இளவரசர் பின் சல்மான் பொறுப்பேற்றப் பின்னர் முதல் வேலையாக ஊழலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அவர் தலைமையில் ஊழல் ஒழிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. குழு அமைக்கப்பட்டு சில மணி நேரங்களில், அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் ஊழல் குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டனர். 3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டது. சவுதியின் பெரும் பணக்காரரான அல் வலீத் பின் தலாலும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் சிக்கினார். ஊழல் குற்றத்தின் கீழ் 200-க்கும் மேற்பட்ட பெரும் பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள் கைதானார்கள்.
மேலும், பல்வேறு ஊழல் குற்றங்களின் கீழ் கைதான பெரும் புள்ளிகள், தங்களின் 70 சதவிகித சொத்துகளை சவுதி அரசுக்கு எழுதிக்கொடுத்தால் உடனே விடுவிக்கப்படுவார்கள் என்று சவுதி அரசு நிபந்தனை வைத்து உலக அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்தது.
இந்நிலையில், ஊழலுக்கு எதிராக இளவரசர் முகம்மது பின் சல்மான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைத்துவிட்டதாக அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் ஷோக் சவுத் அல் மோஜப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் `இளவரசர் தலைமையில் கடந்தாண்டு உருவாக்கப்பட்ட ஊழல் ஒழிப்புக் குழு 381 பேரிடம் விசாரணை நடத்தியது. ஊழல் குற்றத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஒரு ஓட்டலில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரிடமும் செய்துகொண்ட சமரசத்தின்படி, ஒவ்வொருவரிடமிருந்தும், 70% சொத்துகள் வசூலிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஊழல் செய்து சம்பாதிக்க நிலம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட சொத்துகள் அரசுக்கு எழுதி வாங்கப்பட்டது. இதனால் 132 பில்லியன் டாலர் அரசுக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் சவுதி அரசின் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.