கோவையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு விழா அழைப்பிதழில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில், நாற்பதாண்டுகளுக்குப் பிறகு, ஜல்லிக்கட்டுப்போட்டி நாளை (28.1.2018) நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது. நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 400 காளைகளும், 403 மாடுபிடி வீரர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான அழைப்பிதழ் இன்று காலை முதல் அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த அழைப்பிதழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் இல்லாமல் அச்சடிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எடப்பாடி ஆதரவாளர் என்பதால், அவரது மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் துணை முதலமைச்சரின் பெயர் அச்சிடப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் கூறுகையில், “நான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளன்தான். ஆனால், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் படம் மற்றும் பெயரை அழைப்பிதழில் போடாததில் எனக்கு வருத்தம்தான். அவரது படம் மற்றும் பெயரைக் கண்டிப்பாகப் போட்டிருக்க வேண்டும். அவரது படத்தை எதற்காகப் புறக்கணித்தார்கள் என்று தெரியவில்லை. இதற்காக, நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.