போலீசார் தாக்கியதால் தீக்குளித்த நெல்லை கார் டிரைவர் மணிகண்டன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். சம்பவம் தொடர்பாக போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மணிகண்டன் உடல் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. கிராம மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள ஆயாள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமர் என்பவரது மகன் மணிகண்டன்(28).
கார் டிரைவரான இவர் சென்னை தாம்பரத்தில் தங்கி, கிண்டியில் உள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 24ம்தேதி தரமணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வேளச்சேரி போலீசார், காரில் ஷீட் ெபல்ட் அணியாமல் சென்றதாக மணிகண்டனை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அவர்களிடையே வாக்குவாதம் ஏற்படவே மணிகண்டனை போலீசார், தரக்குறைவாக பேசியதுடன் அவரது ஓட்டுனர் உரிமம் மற்றும் செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது. பொது இடத்தில் தன்னை தரக்குறைவாக பேசியதால் அவமானம் அடைந்த மணிகண்டன், போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
இதில் உடல் கருகிய அவர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மணிகண்டன் மீது தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தற்கொலை முயற்சி மேற்கொண்ட மணிகண்டனின் தாய் வசந்தா மற்றும் சகோதரிகள் ஆகியோர் போலீஸ் கமிஷனர் மற்றும் கூடுதல் கமிஷனர் அருணை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார் ஓட்டுனர் மணிகண்டனை வேளச்சேரி போக்குவரத்து உதவி ஆய்வாளர் தாமரைச்செல்வன் ஆபாசமாகபேசி இரும்பு கம்பியால் தாக்கியது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் தாமரைச்செல்வனை, போலீஸ் கமிஷனர் ஏகே. விஸ்வநாதன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மணிகண்டன், நேற்று பரிதாபமாக இறந்தார்.
மணிகண்டன் இறந்த தகவல் அறிந்து கால் டாக்சி ஓட்டுனர்கள், தற்கொலைக்கு காரணமான சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்யக்கோரி மருத்துவமனை முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மணிகண்டன் உடலுக்கு சென்னை மாநகர கூடுதல் கமிஷனர் சாரங்கன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறுகையில் மணிகண்டன் தற்கொலை தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மணிகண்டன் உடல், பிரேத பரிசோதனைக்கு பின்னர் மணிகண்டனின் தாய் வசந்தாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் மணிகண்டன் உடல், ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள ஆயாள்பட்டி கிராமத்திற்கு இன்று காலை 7 மணிக்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் சங்கரன்கோவில் டிஎஸ்பி ராஜேந்திரன், பனவடலிசத்திரம் இன்ஸ்பெக்டர் ராணி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்குள்ள மயானத்தில் காலை 8 மணிக்கு மணிகண்டன் உடல் தகனம் செய்யப்பட்டது.
இறுதி சடங்குகளில் கிராம மக்கள் திரளாக பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் இதையொட்டி ஆயாள்பட்டி கிராமமே சோகத்தில் உள்ளது.