லண்டனில் இந்திய தூதரகம் முன்பு , பாகிஸ்தான் ஆதரவாளரும், பிரிட்டன் பிரபுகள் சபை உறுப்பினரான நஜீர் அகமது, காஷ்மீருக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என நடத்திய போராட்டத்தின் போது, இந்தியா – பாக்., ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்து பார்லிமென்டில் பிரபுகள் சபை எம்.பி.,யாக இருப்பவர் நஜீர் அகமது. பாகிஸ்தான் ஆதரவாளரான இவர் நேற்று லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன், காஷ்மீர் மற்றும் காலிஸ்தான் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இதனையறிந்து அங்கு வந்த இந்தியர்களும் மற்றும் இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய ஆதரவாளர்களும் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரபுக்கள் சபை உறுப்பினராக இருக்கும் நஜீர் அகமது, இங்கிலாந்து சட்டத்தை மீறி பாகிஸ்தானுக்கு ஆதரவாக எவ்வாறு போராடலாம் என அவர்கள் கேள்வி எழுப்பினர். இதனால், இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அங்கு வந்து அவர்களை அமைதிப்படுத்தினர்.
இது தொடர்பாக இந்திய ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், காஷ்மீர் விடுதலையை கேட்கும் நஜீரிடம், அங்கு நடக்கும் பாக்., ஆதரவு பயங்கரவாதம், அத்துமீறல், மறைமுக போர் ஆகியவற்றை நிறுத்த வேண்டும் என கூறவே இங்கு வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.