ரஜினி மக்கள் மன்றத்தில், மகளிரை அதிகம் சேர்க்கும்படி, ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு, நடிகர் ரஜினி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில், நேற்று துவங்கிய மகளிர் மன்றத்தில், ஏராளமான மகளிர், ஆர்வமுடன் இணைந்தனர்.
அரசியலுக்கு வரப்போவதாகவும், 234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிடப் போவதாகவும், டிச., 31ல், நடிகர் ரஜினி அறிவித்தார். கட்சி துவக்குவதற்கு அடித்தளமாக, ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்ற பெயரில், இணையதளம் மற்றும் செயலி துவக்கப்பட்டு உள்ளது. முதன் முறையாக, வேலுார் மாவட்டத்திற்கு, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
‘மக்கள் மன்றத்தில், இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்; மகளிரை அதிகம் சேர்க்க வேண்டும்’ என, ரஜினி உத்தரவிட்டுள்ளார். அதற்கேற்ப, ரசிகர் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை, மாம்பலம், கே.கே.நகர் பகுதிகளில், நேற்று மகளிர் மக்கள் மன்றம் திறப்பு விழா நடந்தது. அதில், ஏராளமான மகளிர் ஆர்வமுடன் சென்று, தங்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்.
மேற்கு சைதாப்பேட்டை, அசோக்நகர் பகுதிகளில், மூன்று மகளிர் மன்றம், ஐந்து இளைஞர் மன்றம் துவக்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், 10 நாட்களில், 2.5 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். துாத்துக்குடி, நெல்லை மாவட்டத்திற்கு, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் விரைவில், அறிவிக்கப்பட உள்ளனர். அங்கு, இன்றும், நாளையும் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
இது குறித்து, ரஜினி ரசிகர்கள் கூறுகையில், ‘ஒவ்வொரு ரசிகர் மன்றம் சார்பிலும், ஐந்து லட்சம் உறுப்பினர்களை சேர்க்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மன்றத்தில் சேர, இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். பெரும்பாலானோர், தாமாக முன்வந்து உறுப்பினராகின்றனர்’ என்றனர்.
ரஜினியின் பூர்வீக மாவட்டமான கிருஷ்ணகிரியில், ‘நடமாடும் ரஜினி மக்கள் மன்றம்’ துவக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் வசதியுடன் அமைக்கப்பட்ட வாகனத்தில், ரஜினியின் மக்கள் மன்றத்தில் சேர விரும்புவோருக்கு, உடனடி சேவை வழங்கப்படுகிறது.