நீண்ட இடைவெளிக்குப்பின், தமிழக அரசுக்கு எதிராக, சிறை நிரப்பும் போராட்டத்தை, தி.மு.க., அறிவித்துள்ளதால், தொண்டர்கள் அதிகம் பேர் பங்கேற்பரா என்ற, கேள்வி எழுந்துள்ளது.
தி.மு.க., தலைமை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பஸ் கட்டண உயர்வை கண்டித்து, இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதன் பிறகும், கட்டணத்தை குறைக்காவிட்டால், வரும், 29ல், தமிழகம் முழுவதும், சாலை மறியல் செய்து, சிறை நிரப்ப, தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்’ என, மாவட்ட செயலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 2012ல், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில், தி.மு.க.,வினர் மீது, நில அபகரிப்பு வழக்கு போடுவதை கண்டித்து, தி.மு.க., சிறை நிரப்பும் போராட்டம் நடத்தியது. போராட்டத்தில் பங்கேற்றோர், காலையில் கைது செய்யப்பட்டனர்; மாலையில் விடுவிக்கப்பட்டனர். எனவே, சிறைக்கு சென்றவர்கள் எத்தனை பேர் என்ற கணக்கு எடுக்க முடியவில்லை.
முதல்வர் பழனிசாமி தலையிலான ஆட்சியில், முதன் முறையாகவும், செயல் தலைவராக, ஸ்டாலின் தேர்வான பின், முதன் முறையாகவும், தற்போது, தி.மு.க., சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளது.
‘தி.மு.க.,வில், ஒரு கோடி உறுப்பினர்கள் உள்ளனர் என, அக்கட்சியின் முன்னோடிகள், மேடையில் முழங்குவதுண்டு. அப்படியிருக்கும் போது, மறியல் போராட்டத்தில், லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்களா; சில ஆயிரம் பேர் மட்டும் கணக்குக்கு கைதாவார்களா என, தெரியவில்லை. இதை வைத்தே, தி.மு.க., தொண்டர்களிடம் உத்வேகம் உள்ளதா என, அறியலாம்’ என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.