பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே நடைபெற்ற குடியரசு தின விழாவில் போலீஸ் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
69-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவை அடுத்த ஜாக்ரான் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் போலீஸார் அணிவகுப்பு மரியாதையுடன் குடியரசு தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் ஜாக்ரான் நகர் காவல்நிலையத்திலிருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர். அந்தக் காவல்நிலையத்தில் துப்பாக்கிகளின் பொறுப்பாளராக இருந்த மஞ்சித் சிங் என்பவர், விழாவின்போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் மனமுடைந்த அவர், தன்னிடம் அளிக்கப்பட்டிருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இதுகுறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மஞ்சித் சிங்கின் உடல் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.