சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பிரதமர் மோடி இன்று அதிகாலை நாடு திரும்பினார். சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 48-வது உலக பொருளாதார மாநாடு நேற்று தொடங்கியது.
இந்த மாநாடு 26-ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சுவிட்சர்லாந்து சென்றார்.
பிரதமருடன் மத்திய மந்திரிகள் சுரேஷ்பிரபு, பியூஸ்கோயல், தர்மேந்திரபிரதான், மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் முகேஷ் அம்பானி, ஆசிம்பிரேம்ஜி, ராகுல்பஜாஜ் உள்ளிட்ட தொழில் அதிபர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். சுவிட்சர்லாந்து சென்ற மோடியை அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வென் நேரில் வரவேற்றார்.
டாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நேற்று தொடங்கியது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் பேசினார். இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் என வெளிநாட்டவரை ஊக்குவிக்கும் வகையில் பேசினார்.
இதையடுத்து, மாநாட்டை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி ஏர் இந்தியா விமானத்தில் நேற்று இரவு இந்தியா புறப்பட்டார். இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் சுவிட்சர்லாந்து அதிகாரிகள் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தனர்.
சுவிட்சர்லாந்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை தலைநகர் டெல்லி வந்தடைந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.