மும்பை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட, நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு, பயங்கரவாதி என கருதப்பட்ட சொராபுதின் ஷேக் உள்ளிட்ட 3 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது போலி என்கவுண்ட்டர் என்று சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக அப்போது குஜராத் உள்துறை மந்திரியாக இருந்த தற்போதைய பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி பி.எச்.லோயா 2014-ம் ஆண்டு நாக்பூரில் திடீரென்று மரணம் அடைந்தார்.
நீதிபதி லோயாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியதால், நீதிபதி லோயாவின் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் அனதா ஷெனாய், தெசீன் பூனவாலா, பந்துராஜ் சம்பாஜிலோன் ஆகியோர் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டன. ஆனால் தலைமை நீதிபதிக்கு எதிராக சமீபத்தில் போர்க்கொடி உயர்த்திய 4 மூத்த நீதிபதிகள், முக்கியமான இந்த வழக்கை ஜூனியர் நீதிபதியான அருண் மிஸ்ராவுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பின்னர் அந்த மனுக்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டன.
இந்தநிலையில் அந்த மனுக்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, நீதிபதி லோயா மரணம் தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் மும்பை வக்கீல்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும், மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அந்த வழக்குகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் அவற்றை தாங்கள் தீவிரமாக பரிசீலிக்க விரும்புவதாகவும், எனவே அந்த வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வருகிற பிப்ரவரி 2-ந் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்றும் அவர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்குகளை வேறு எந்த ஐகோர்ட்டுகளும் விசாரிப்பதற்கும் அவர்கள் தடை விதித்தனர்.
நேற்று வழக்கு விசாரணையின் போது மும்பை வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷாவின் பெயரை குறிப்பிட்டு அவரை பாதுகாக்க முயற்சிகள் நடப்பதாக கூறியதற்கு நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல், இந்த வழக்கில் மராட்டிய அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வேயும் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், தற்போதுள்ள நிலவரப்படி நீதிபதி லோயா இயற்கையாகத்தான் மரணம் அடைந்ததாக கருதப்படுவதாகவும், எனவே அவதூறாக எந்த கருத்துகளையும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறினார்கள்.
மேலும் விசாரணையின் போது, மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் கூறிய ஒரு கருத்தை கேட்டு கோபம் அடைந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அந்த கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு அதற்காக வருத்தம் தெரிவிக்குமாறும் கூறினார். இதைத்தொடர்ந்து தான் தெரிவித்த கருத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக கூறிய இந்திரா ஜெய்சிங், வருத்தமும் தெரிவித்தார்.
பின்னர் இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 2-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.