விஜய் மல்லையா மீதான நாடுகடத்தல் வழக்கின் விசாரணை இன்று துவங்குகிறது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா,58. இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் லண்டன் தப்பியோடினார்.இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி என சமீபத்தில் அறிவிக்கப்பட்டார்.
சி.பி. ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் மல்லையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வருவதாக இந்தியா சார்பில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தவழக்கு கடந்த ஆண்டுடிசம்பர் மாதம் 14-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டால், மும்பை ஆர்தர்சாலை சிறையில் அடைக்கப்படுவார்.அங்கு போதிய வசதிகள் உள்ளன என இந்தியா சார்பில் வழக்கறிஞர் கூறினார். அதற்கான ஆவணங்களை ஒப்படைத்தார். நீதிபதி எம்மா ஆர்புத்நோட், ஜன. 11-ம் தேதி ஒத்தி வைத்தார். இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. மாஜிஸ்திரேட்டின் தீர்ப்பை பொறுத்தே மல்லையா நாடு கடத்தப்படுவாரா என்பது தெரிவரும்.