ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில், வரும் ஏப்ரல் மாதம் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான மல்யுத்த வீரர்கள் தேர்வு, புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.
2008 (பெய்ஜிங், வெண்கலம்), 2012ம் (லண்டன், வெள்ளி) ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற சுஷில் குமார், 74 கிலோ எடை பிரிவில் தேர்வு பெற்றார். அரையிறுதியில், அவரிடம் பர்வீன் ராணா தோல்வியை சந்தித்திருந்தார்.
இதனால் போட்டி நடைபெற்ற மைதானத்தில், சுஷில் குமார், பர்வீன் ராணா ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. போட்டியின்போது, சுஷில் குமார் தன்னை கடித்ததாகவும், அவரது ஆதரவாளர்கள் தன்னையும், தனது சகோதரரையும் தாக்கியதாகவும், பர்வீன் ராணா புகார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், சுஷில் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யூ. எப். ஐ) விசாரணை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சுஷில் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, டபிள்யூ. எப். ஐ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘’பர்வீன் ராணா தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.
மோதல் சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு சுஷில் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதற்கு பதிலளிக்க மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். தற்போது வரை சுஷில் குமார் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை’’ என்றார்.