அசாமில் பெங்காலிகளை விரட்டியடிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அசாமில் உண்மையான இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்கக் கோரும் விண்ணப்பங்களை, 3.29 கோடி பேர் சமர்ப்பித்து உள்ளனர். இவை, தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, 1.9 கோடி பேரை, இந்திய பிரஜைகளாக அங்கீகரித்து, தேசிய பிரஜைகள் பதிவு ஆவணத்தின் முதல் பகுதி கடந்த டிசம்பர் 31-ம் தேதி வெளியிடப்பட்டது. மீதமுள்ளவர்கள் தொடர்பாக, பல்வேறு நிலைகளில், ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பெங்காலிகளை இந்திய பிரஜைகளாக பதிய மறுப்பு தெரிவித்து அசாமை விட்டு விரட்டியடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிர்ப்ஹூம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியது, அசாமில் பா.ஜ. ஆட்சி நடப்பதால் தேசிய பிரஜைகள் பதிவு ஆவணம் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறது. எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த பெங்காலிகளும் பக்கத்து மாநில இந்தியர்கள் தான் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். மேற்குவங்கத்தில் அசாம் , கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தவர்களும் வசிக்கின்றனர். அவர்களுக்கு எந்த பிரச்னையும் நாங்கள் தரவில்லை. ஆனால் அசாமில் வசிக்கும் பெங்காலிகளுக்கு பிரச்னை ஏற்பட்டால் அது எங்கள் மாநிலத்திற்கு ஏற்பட்ட பிரச்னை ஆகும். இந்த விவகாரத்தில் பா.ஜ. நெருப்புடன் விளையாட வேண்டாம் என்றார்.