‘ இந்தியாவின், அருணாச்சல பிரதேச எல்லைக்குள், 200 மீ., துாரம், சீன வீரர்கள் ஊடுருவியதாக, ஊடகங்களில் செய்தி வெளியானது.
இது குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், கெங் சுவுாங், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:இந்தியாவுடனான எல்லை பிரச்னையில், சீனாவின் நிலைப்பாடு என்றுமே தெளிவாக, உறுதியானதாக உள்ளது. அருணாச்சல பிரதேசம் என்ற ஒன்று இருப்பதை, சீனா, ஒருபோதும் அங்கீகரித்தது கிடையாது.
சீன ஊடுருவல் தொடர்பாக, செய்தி வெளியானதாக கூறப்படுகிறது; அது பற்றி எனக்கு தெரியாது.இந்தியா – சீனா இடையிலான, எல்லை தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தீர்வு முறை அமலில் உள்ளது.
இந்த முறையில், எல்லை தொடர்பான பிரச்னைகளை சமாளிக்க முடியும். எல்லையில், அமைதி, ஸ்திரத்தன்மையை பேணுவது, இந்தியா – சீன நாடுகளுக்கும் நல்லது.இந்தியா – சீனா இடையே, கடந்தாண்டு, டோக்லாம் பகுதியில் எழுந்த பிரச்னைக்கு, சுமுக தீர்வு காணப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.