இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சுதந்திர வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் நோக்கில் பொருளாதார தொழில்நுட்பப் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை (எட்கா) கைச்சாத்திட இருநாடுகளுக்கிடையில் உயர்மட்ட பேச்சுகள் இடம்பெற்றிருந்தபோதிலும் பொது எதிரணியின் கடும் எதிர்ப்பால் இந்த ஒப்பந்தப் பேச்சுகள் அடுத்தாண்டுக்கு நுழைகின்றன.
எட்கா ஒப்பந்தம் தொடர்பில் முழுமையான இருதரப்பு இணக்கப்பாடுகள் இதுவரையிலும் எட்டப்படவில்லை. எட்கா உடன்படிக்கை தொடர்பில் மூன்று சுற்றுப்பேச்சுகள் தற்போதுவரை இடம்பெற்றுள்ளதுடன், இந்தியாவின் தெளிவான நிலைப்பாடு பல்வேறு மட்டங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, வர்த்தகம், தொழில்நுட்பம், தகவல் பரிமாற்றல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தே எட்கா உடன்படிக்கையில் ஆராயப்படுகிறது.
2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் பின்னர் இருநாடுகளுக்குமிடையில் மேற்படி ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவது தொடர்பில் ஆராயப்பட்டது. 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அப்போதைய இந்திய வர்த்தக அமைச்சராகவிருந்த நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது, எட்கா உடன்படிக்கை குறித்து பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்ததுடன், அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்தியாவுக்கும் விஜயம்செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுகளில் ஒரு பொதுவான இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.
அதனையடுத்து இவ்வருடம் ஜனவரி மாதத்தில் மூன்றாம் சுற்றுப்பேச்சுகளை முன்னெடுக்க சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவரின் விஜயத்தையடுத்து எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்றும் அவர் கூறியிருந்தாலும், பொது எதிரணியினர் மற்றும் சில தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த போராட்டங்களால் பேச்சுகளில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டிருந்தது.
கடந்த மாதம் மீண்டும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் மோடியுடனும், வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுடனும் எட்கா உடன்படிக்கை குறித்து கலந்துரையாடி விரைவில் உடன்படிக்கையை கைச்சாத்திட நடவடிக்கையெடுப்போம் எனக் கூறியிருந்தார்.
இரண்டு வருடங்கள் கடந்து தற்போது இந்தப் பேச்சுகள் மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கிறது. 2018ஆம் ஆண்டில் சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திட அரசு முடிவுசெய்துள்ளது. அடுத்த மாதம் இடம்பெறும் சிங்கப்பூர் பிரதமரின் விஜயத்தில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக கூறப்படும் அதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திடும் நோக்கிலேயே அரசின் முன்னெடுப்புகள் அமைந்துள்ளன.