ரஞ்சி கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு விதர்பா, டெல்லி அணிகள் தகுதி பெற்றன. இதில் விதர்பா அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இறுதிப்போட்டி இன்று இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற விதர்பா அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாகக் குணால் சந்தெலா, கவுதம் கம்பீர் களமிறங்கினார்கள். சந்தெலா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கம்பீர் 15 ரன்களுக்கு வீழ்ந்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய துருவ் ஷோரே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹிம்மத் சிங் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினார். துருவ் சதமடித்தார். அரைசதத்தைக் கடந்த ஹிம்மத் சிங் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல்நாள் ஆட்ட நேர முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் சேர்த்துள்ளது. துருவ் 123 ரன்களுடனும் விகாஸ் மிஷ்ரா 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். விதர்பா தரப்பில் ஆதித்ய தாக்கரே, ரஜினீஷ் குர்பானி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். சித்தேஷ் நேரல், அக்ஷய் வகாரே தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்கள். நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.