வடகொரியாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சீனாவின் நடவடிக்கை தமக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், சீனா கையும் களவுமாக பிடிபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் பியாங்யாங்கிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டால், வடகொரியாவுக்கு நட்புரீதியான தீர்வு ஏற்படாது என்றும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் கடந்த சல நாட்களுக்கு முன்னர், வடகொரியா மீது ஐ.நா விதித்த எண்ணெய் தடைகளை மீறுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை சீனா மறுத்தது. இதையடுத்து கடந்த வாரம், வடகொரியாவில் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதை 90 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா வரையறுத்த ஐ.நா தீர்மானத்திற்கு சீனா ஆதரவு தெரிவித்தது.
வடகொரியாவின் சர்ச்சைக்குரிய ஏவுகணை சோதனைகளை கட்டுப்படுத்த முயற்சிக்கும் வகையில் இந்த புதிய தடைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் சீன டாங்கர்கள் மூலம் கடலில் உள்ள வடகொரிய கப்பல்களுக்கு எண்ணெய் விநியோகம் நடைபெறுவதாக அதிபர் டிரம்ப், சீனா மீது குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த அக்டோபரில் இருந்து, சீன – வடகொரியா கப்பல்களுக்கு இடையே சட்டவிரோதமான எண்ணெய் பரிமாற்றம் நடைபெற்றதை சுமார் 30 முறை அமெரிக்க உளவு செயற்கைக்கோள்கள் கண்டுபிடித்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து எந்த தகவலையும் அமெரிக்கா இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இதுபோன்ற பறிமாற்றங்கள் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்க வாய்ப்பிருப்பதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
சட்டவிரோதமாக, கப்பல்களின் மூலம் வடகொரியாவிற்கு எண்ணெய் பரிமாற்றப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை, சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரென் க்வாவ்சியாங் மறுத்துள்ளார். இந்நிலையில், அமெரிக்க அரசுத்துறை செய்தித் தொடர்பாளர் மைக்கெல் கெய்வி, வடகொரியாவுடனான பொருளாதார உறவுகளை முறித்துக் கொள்ளுமாறு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.