மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் மக்களை கவரும் விதமாக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாகவும், குறிப்பாக மெட்ரோ ரயில்நிலையங்களில் ஷாப்பிங் மால்களை நிறுவ உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா கடைசியாக திறந்து வைக்கப்பட்ட திட்டமான மெட்ரோ ரயில் சேவை திட்டம் மெதுவாக மக்களிடத்திலே பிரபலமாகி வருகிறது. இருப்பினும் போதிய வருமானம் கிடைக்காததால், இதன் நிர்வாகம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
நேரு பூங்காவிருந்து – விமான நிலையம், சின்னமலையிலிருந்து விமான நிலையம் உள்ளிட்ட வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தற்போது இயங்கி வருகிறது. விரைவில் இந்த சேவை பல புதிய வழித்தடங்களுக்கும் விரிவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நவீன வசதியுடன் கட்டமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷாப்பிங் மால்களை நிறுவ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் அனுமதி வாங்கிவிட்டதாகவும், விரைவில் இதன் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டமைப்புகளுக்கு பிறகு நாள் ஒன்றுக்கு தற்போது 30 ஆயிரம் வரையில் இருக்கும் பயணிகளின் எண்ணிக்கை, விரைவில் 2 லட்சமாக உயரும் என்றும் மெட்ரோ நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.