இரு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில், முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குஜராத் முதல்வராக, மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானியும், ஹிமாச்சல முதல்வராக, மத்திய அமைச்சர், ஜே.பி.நட்டாவும் தேர்ந்தெடுக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், மொத்த முள்ள, 182 தொகுதிகளில், பா.ஜ., 99 தொகுதிகளில் வென்று, ஆறாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த தேர்தலை விட, வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்ததால், முதல்வர் விஜய் ரூபானி மீது, கட்சி மேலிடம் அதிருப்தியில் உள்ளது.
காங்., 80 தொகுதிகளில் வென்று, வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. அதனால், காங்கிரசை சமாளிக்கும் வகையில், பேச்சுத் திறன் உள்ளவரை முதல்வராக நியமிக்க, கட்சி மேலிடம் தீர்மானித்து உள்ளது. முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, கட்சியின் மேலிட பார்வையாளர்களாக, மத்திய நிதிஅமைச்சர், அருண் ஜெட்லி, கட்சியின் பொதுச் செயலர், சரோஜ் பாண்டே நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் கட்சி தலைவர், அமித் ஷாவின் நம்பிக்கையை பெற்றுள்ள, மத்திய ஜவுளித் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி, முதல்வராக்கப்படலாம் என, பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் அதை, ஸ்மிருதி இரானி மறுத்து உள்ளார்.
மத்திய சாலை போக்குவரத்து துறை இணையமைச்சர், மன்சுக் மாண்டவியாவின் பெயரும், பரிசீலனையில் உள்ளது. சவுராஷ்டிராவில், படேல் சமுதாயத்தைச் சேர்ந்த அவர், விவசாயிகளிடம் பரிச்சயமானவர். கர்நாடக கவர்னர், வஜுபாய் வாலாவின் பெயரும் அடிபடுகிறது. குஜராத் சட்ட சபை சபாநாயகராகவும், மாநில அமைச்சராகவும் அவர் பணியாற்றி உள்ளார்.தற்போதைய துணை முதல்வர், நிதின் படேல், மத்திய வேளாண் துறை இணையமைச்சர், புருஷோத்தம் ரூபாலா ஆகியோரின் பெயர்களும், முதல்வர் வேட்பாளர் போட்டியில் உள்ளன.
ஹிமாச்சலில்…
இதற்கிடையே, ஹிமாச்சல பிரதேசத்தில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றாலும், முதல்வர் வேட்பாளர், பிரேம் குமார் துாமல் தோல்வி அடைந்தார். அதனால், புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க, மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர் ஆகியோர், மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஜே.பி.நட்டாவுக்கு, முதல்வராவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக, கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர். ஹிமாச்சல பிரதேச மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான, ஜெய்ராம் தாக்குருக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.