இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் நஜீப் அப்துல் ரசாக்கை வடக்கிற்குப் பயணம் மேற்கொள்ளுமாறு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மலேசிய வெளிவிவகார அமைச்சின் ஊடாக, அவர் விடுத்துள்ள வேண்டுகோளில்,
‘வடக்கில் மலேசியப் பிரதமர் பயணம் மே்றகொண்டால், இங்குள்ள நிலைமைகளின் உண்மைத்தன்மையை காண்பிக்கும் வாய்ப்பு தமக்குக் கிடைக்கும் என்றும்,இலங்கைக்கான பயணத்தின் முக்கிய நிகழ்வாக அது அமையும்’ என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கோரிக்கை தொடர்பாக மலேசிய வெளிவிவகார அமைச்சிடம் இருந்து பதில் இன்னும் வரவில்லை என்றும், எனினும் சாதகமான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சர் செயலகம் நேற்றுக்காலை கூறியிருந்தது.
முன்னதாக, மலேசிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருந்த அறிக்கையில், வடக்கு மாகாண முதலமைச்சரையும் மலேசியப் பிரதமர் சந்திக்கவிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
அதேவேளை, இன்றுடன் மலேசியப் பிரதமர் இலங்கை பயணத்தை நிறைவு செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.