விஜய், அஜித் இருவரும் தற்போது அவர்களது அடுத்த படங்களில் நடிக்கத் தயாராகி வருகிறார்கள். அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்திற்கான கதை விவாதம் நிறைவடைந்துவிட்டதாகவும், படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்யும் பணி தற்போது நடந்து வருவதாகவும் தெரிகிறது. படத்தில் அஜித்தின் ஜோடியாக நடிக்க உள்ள நடிகை யார் என்பது குறித்து தயாரிப்பு தரப்பில் இன்னும் அமைதியாகவே இருக்கிறார்கள்.
ஜனவரி மாதத்தில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. ஆனால், அதற்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளது. இருந்தாலும் இன்னும் படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களைப் பற்றிய சஸ்பென்சை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதே போலத்தான் விஜய் அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ள புதிய படத்திற்கும் இன்னும் நாயகி யார் என்பதை அறிவிக்காமலே உள்ளார்கள். சமீபத்தில்தான் இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது இப்படத்தின் கதை விவாதம் நடந்து வருகிறதாம். அது முடிவடைந்ததும்தான் படத்தைப் பற்றிய மற்ற விவரங்களை அறிவிப்பார்கள் என்கிறார்கள்.
அஜித்தும், விஜய்யும் சொல்லி வைத்தாற் போல அவர்கள் பட நாயகிகள் யார் என்பது பற்றி அறிவிக்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.