துபாயில் நடைபெற்ற உலக சூப்பர் சீரிஸ் பேட்மின்ட்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
சூப்பர் சீரிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியை எதிர்த்து சிந்து விளையாடினார். போட்டியின் முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் வென்று அசத்தினார். ஆனால், அடுத்த செட்டில் சுதாரித்துக்கொண்ட உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான யமாகுச்சி, 21-12 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை வென்றார். இதனால், வெற்றியாளரை முடிவுசெய்யும் மூன்றாவது செட் பரபரப்பானது. மூன்றாவது செட்டில், தொடக்கத்தில் சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் கடைசி நேரத்தில் ஜப்பான் வீராங்கனையின் கை ஓங்கவே, அதை 19-21 என்ற கணக்கில் சிந்து இழந்தார். இதன்மூலம், உலக சூப்பர் சீரிஸ் பேட்மின்ட்டன் தொடரில் சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தத் தொடரின் இறுதிப்போட்டிக்கு சிந்து முதல்முறையாக முன்னேறியிருந்தார். அரையிறுதிப் போட்டியில், உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யுபெ-வை, 21-15, 21-18 என்ற நேர் செட்களில் சிந்து வீழ்த்தியிருந்தார்.