விஜய் மல்லையாவை நாடு கடத்தி கொண்டு வரப்படும் வழக்கில் இந்தியாவில் சிறைகள் படுமோசம் எனவும் அவருக்கு தேவையான வசதிகள் இருக்காது என கோர்ட்டில் வாதிடப்பட்டது.
ரூ.9 ஆயிரம்கோடி வங்கி கடன் வாங்கிய வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டன் தப்பியோடிவிட்டார். அவரை நாடு கடத்தி கொண்டு வரும் வழக்கு வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மல்லையாவை நாடு கடத்தி இந்தியா அனுப்பினால் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார் என்றார்.
இந்த வழக்கு நேற்று மாஜிஸ்திரேட் இம்மா ஆர்புத்நாட் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மல்லையா வழக்கறிஞர் கிளாரே மான்ட்கோமெர்ரி கூறுகையில், மல்லையாவை இந்திய சிறையில் அடைப்பதற்கு முன் சிறை பராமரிப்பு சரியில்லை என்றார். அப்போது ஸ்காட்லாந்து சிறை சேவை அதிகாரி ஆலம் மிட்சல் அறிக்கையை சமர்பித்தார்.
அந்த அறிக்கையில் இந்தியாவில் சிறைகள் படுமோசம் எனவும், கோல்கட்டா அலிபூர்சிறை, சென்னை புழல்சிறை உள்ளிட்டசிறைகளை நேரில் ஆய்வு செய்த போது அங்கு சுத்தம் சுகாதாரம் இல்லாமல் இருப்பதாகவும், கைதிகள் கூட்டம் அதிகமாகவும், திறந்தவெளி கழிவறைகள், கரப்பான்பூச்சிகள்,பாம்புகள் வசிக்கும் இடமாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். இதனை சுட்டி காட்டி மல்லையா இ்ந்திய சிறையில் அடைக்கப்பட்டால் அவரது உடலுக்கும் உயிருக்கும் என்ன உத்தரவாதம் உள்ளது என வாதிட்டார். வழக்கு 2018-ம் ஆண்டு ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.