பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-ஐ கொலை செய்வதற்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று (புதன்கிழமை) வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரச வழக்கறிஞர் மார்க் கரோல் கூறுகையில், ”டவுனிங் வீதியிலுள்ள பிரதமர் அலுவலக நுழைவாயிலில் குண்டுத்தாக்குதல் நடத்தி குழப்பத்தை ஏற்படுத்தி, பின்னர் பிரதமரின் அலுவலகத்தை அணுகி பிரதமரை கொலை செய்ய திட்டமிட்டதாக 20 வயதுடைய நாய்மூர் ரஹ்மான் என்பவர் சந்தேகத்தின் பேரில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
அவருடன் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய மொஹமட் இம்ரான் மீதும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதேவேளை, லிபியாவிலுள்ள ஐ.எஸ். அமைப்பில் இணைய முயற்சித்ததாகவும் இம்ரான் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் தரப்பில் பிணை மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், அவர்கள் இருவரும் எதிர்வரும் 20ஆம் திகதி லண்டன் குற்றவியல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்” என்றார்.