காலி, கிந்தோட்டையில் சம்பவம் உக்கிரமடைந்த தறுவாயில் விசேட அதிரடி படையினரின் எண்ணிக்கையை குறைத்தமை தவறாகும். அத்துடன் இந்த சம்பவத்திற்கு பொலிஸாரின் அசமந்த போக்கே காரணம் என பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார். அப்படியாயின் பொலிஸாரின் அசமந்த போக்கிற்கு பொறுப்பு கூற கூடியவர் யார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் 2 கீழ் ஏற்கனவே எழுப்பப்பட்ட கேள்விக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க பதிலளித்த பின்னர் கேள்வி எழுப்பும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், காலி, கிந்தோட்டையில் விசேட அதிரடிப் படையினர் அகற்றப்படவில்லை. அதற்கு மாறாக குறைக்கப்பட்டதாக அமைச்சர் சபையில் கூறினார். அப்படியாயினும் இனக் குழுக்களுக்கு இடையில் மோதல் உக்கிரமடைந்த தறுவாயில் விசேட அதிரடிப் படையினரை குறைத்தமை பெரும் தவறாகும். ஏனெனில் இவ்வாறான இனவாத மோதல் நாடு பூராகவும் பரவும் அபாயம் உள்ளது. இந் நிலையில் அதிரடிப் படையின் எண்ணிக்கையை குறைத்தமை உகந்ததல்ல.
மேலும் இந்த சம்பவம் உக்கிரமடைவதற்கும் பொலிஸாரின் அசமந்த போக்கே காரணம் என பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார். தற்போது அரசியல் இலாபத்திற்காக இனவாதம் தூண்டப்படும் தறுவாயில் பொலிஸ் மா அதிபரின் கருத்து மிகவும் பாரதூரமானது.
இந்நிலையில் பொலிஸ் மா அதிபராக இருந்து கொண்டு இவ்வாறான குற்றச்சாட்டை இவர் யார் மீது சுமத்துகின்றார்? இவர் தனது குற்றச்சாட்டை சம்பவம் நடந்த பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது சுமத்தினாரா? அல்லது வேறு நபர் மீது சுமத்தினரா என்பதனை அமைச்சர் கூற வேண்டும். அவர் பொலிஸ் அசமந்தம் என்று யாரை கூறுகின்றார். பொலிஸ் அசமந்த போக்கிற்கு பொறுப்புக் கூறக் கூடியவர் யார் ? எனவே இது தொடர்பில் அமைச்சரின் நிலைப்பாடு என்ன? பொலிஸ் மா அதிபரின் கூற்றை அடிப்படையாக கொண்டு ஏதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளவா என்றார்.
இதனையடுத்து பதிலளித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க, பொலிஸ் மா அதிபரின் கூற்றை நான் முற்று முழுதாக எதிர்க்கின்றேன். அதற்கு நான் ஒருபோதும் இணங்கமாட்டேன். மேலும் இந்த வன்முறை நாடு பூராகவும் விஸ்தரிக்கப்படுவதை பொலிஸாரின் செயற்பாட்டின் ஊடாகவே தடுக்க முடிந்தது. இதன்போது பொலிஸார் பெரும் அர்ப்பணிப்பினை செய்துள்ளனர் என்றார்.