பியாங்யங், வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு திடீர் ராணுவ தாக்குதலை மேற்கொள்ள ரஷ்யா தயாராகி வருகிறது.
அமெரிக்காவையே அழிக்கும் வல்லமை தங்கள் நாட்டுக்கு உள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளதைத்தொடர்ந்து ரஷ்யா இந்த முடிவுக்கு வந்துள்ளது. வடகொரியாவின் செயல் ரஷ்யாவை கடும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளதாக கூறும் ரஷ்யாவின் பாதுகாப்புதுறை செயலர் நிகோலே பேட்ரஸ்ஹேவ், ”வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கை அனைத்து விவகாரங்களுக்குமான தீர்வாக அமையும்” என தெரிவித்துள்ளார்.
வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, தொடர்ந்து விமர்சித்தும் வருகிறது. மேலும் ”வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைகள் என்பது கால விரயம்
எனவும், ராணுவ நடவடிக்கையே தகுந்த முடிவு,” எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.ஆனால் இந்த விவகாரத்தில் அதிகம் அக்கறை செலுத்தாமலிருந்த ரஷ்யா தற்போது வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை இன்னொரு உலக போருக்கு வழிவகுக்க வாய்பிருக்கிறது என்ற அச்சமும் நிபுணர்களிடையே எழுந்துள்ளது.