முட்கள் நிறைந்த பாதையிலேயே நானும், ஜனாதிபதியும் பயணம்! – முரண்பாடுகள் இல்லை என்கிறார் பிரதமர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தனக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது என வெளியாகிவரும் தகவல்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்தார்.
“புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக நானும் ஜனாதிபதியும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றோம். இது புதியதொரு அனுபவம். தவறுகள் இடம்பெறலாம். அவற்றை சரிசெய்துகொண்டு முன்நோக்கிப் பயணிப்போம்” என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ராஜபக்ஷ ஆட்சியைப்போன்று தவறுகள் மற்றும் குறைபாடுகளை மூடிமறைத்து சட்ட ஆட்சியை காலடியில் போட்டு நசுக்குவதற்கும், சமூக நியாயத்தை குழிதோண்டி புதைக்கவும் நல்லாட்சி அரசு தயாராக இல்லை. கடன் பொறிக்குள் சிக்கியிருந்த நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடியதுடன், அரச பயங்கரவாதமும் கோலோச்சியிருந்தது.
எனவே, இந்நிலைமையை மாற்றி நாட்டை புதியதொரு பாதைக்குப் பிரவேசிக்க செய்வதற்கு நானும், ஜனாதிபதியும் பாடுபட்டுவருகின்றோம். அந்தப் பயணத்துக்கான பாதை முட்கள் நிறைந்தவையாகும்.
பொய்யான குழிகளில் விழுந்துவிடாமல், ஏமாற்றமடையாமல் அந்தப் பயணத்தில் முன்சென்று பண்பாடுமிக்க அரசொன்றையும் நீதியான சமூகமொன்றையும் ஜனநாயகம் மிக்க இலங்கையையும் உருவாக்கும் நிமித்தம் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்” – என்றார்.