அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து மீடியாக்களை தொடர்ந்து சீண்டி வருகிறார். ‘பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு விமர்சனங்களை தாங்கி கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும்’ என்று எதிர்கட்சிகள் டிரம்புக்கு அட்வைஸ் மழை பொழிந்து வருகின்றனர்.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ட்ரம்ப், மீடியாக்களை சேர்ந்தவர்கள் யார் தன்னை பற்றி விமர்சித்தாலும் சற்றும் யோசிக்காமல் அவர்களின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்வீட் தட்டி விடுகிறார். அப்படிதான் அண்மையில் “Times Magazine” ஐ வம்பிழுத்து ட்வீட் செய்திருந்தார்..
அந்த ட்வீட்டில் ‘ கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் என்னை சிறந்த நபராகத் (Person of the Year) தேர்ந்தெடுத்திருப்பதாக டைம்ஸ் ஊடகம் தெரிவித்தது. ஆனால் நான் கடந்தாண்டைப் போலவே இந்த ஆண்டும் இண்டர்வ்யூ தர வேண்டுமாம்.. போட்டோ ஷூட்டுக்கும் ஒப்புக் கொள்ள வேண்டுமாம். நான் முடியாது என்றுக் கூறிவிட்டேன்” என்றுக் குறிப்பிட்டிருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள மக்களால் அதிகம் பேசப்பட்ட, பிரபலமான நபருக்கு டைம்ஸ் ஊடகம் சார்பில் ’Person of the Year’ என்னும் பட்டம் அளிக்கப்படும். கடந்த ஆண்டு ட்ரம்புக்கு இந்த பட்டம் கிடைத்தது. இதுகுறித்து விமர்சித்துதான் மேற்குறிப்பிட்டுள்ளப் பதிவை பகிர்ந்துள்ளார் ட்ரம்ப். ட்ரம்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக டைம்ஸ் ஊடகம் ’எங்களை பற்றி தவறானத் தகவலை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார். இறுதி முடிவுகள் வெளியாகும் வரை இந்தாண்டின் சிறந்த நபர் யாரென்பதை நாங்கள் வெளியே சொல்லமாட்டோம்’ என்று குறிப்பிட்டு ட்ரம்ப் உண்மைக்கு மாறான தகவலை பகிர்ந்திருப்பதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து தற்போது சர்வதேச ஊடகமான CNN செய்தி தொலைக்காட்சியை விமர்சித்து ட்வீட் செய்து, நெட்டிசன்களின் மீம்ஸுக்கு இரையாகி இருக்கிறார் ட்ரம்ப். CNN ஊடகம் அமெரிக்க அரசாங்கத்தை தொடர்ந்து விமர்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் CNN தொலைக்காட்சி அமெரிக்காவை பற்றி வெளி உலகிற்கு தவறான ஒரு பிம்பத்தை உருவாக்கி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அவரின் ட்வீடுக்கு பதிலளித்துள்ள CNN, “அமெரிக்காவை பற்றி வெளி உலகிற்கு தெரியப்படுத்துவது எங்கள் வேலையல்ல.. அதிபரான உங்களின் வேலை. உண்மையான செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதே எங்கள் வேலை” என்று காட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.
’ட்விட்டர் சண்டை போடுவதில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நிகர் அவரேதான்!’ என்று நெட்டிசன்கள் நக்கல் அடித்து வருகின்றனர்!