யாழ்ப்பாணம் பொம்மை வெளிப்பகுதியில் உரைப்பையில் கட்டப்பட்ட நிலையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்திற்கு விரைந்த விசேட பாதுகாப்பு படையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட ஆயுதங்களில் ஏ.கே. ரி 56 – 2 ரக துப்பாக்கிகள் 10 மற்றும் 6 எம்.எம். மோட்டார் குண்டுகள், ரி.56 ரவைகள் உட்பட கைக்குண்டுகள் வாள்கள், மகசின் 4 கைக்குண்டு 2, ஆகியன காணப்படுவதாகவும், அவை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, இவை நீண்ட காலத்திற்கு முன்னர் அங்கு கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டுள்ளனர்.
இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினம் ஆகையினால் மக்களிடையே பதற்றத்தினை ஏற்படுத்தும் முகமாக ஆயுதங்கள் போடப்பட்டிருக்கலாமென மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.