பல சிங்களத் தலைவர்களும், படைத்தளபதிகளும் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரத்தைப் போற்றிப் புகழும் போது, நாங்கள் அதனை புகழ்வதில் என்ன பிரச்சனை இருக்கின்றது என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை எழுச்சியுடன் கொண்டாடுவதனூடாக அந்த வீரத்தலைவனுடைய வழியிலே என்னென்ன சாதனைகள் படைக்கப்பட்டன என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளக்கூடிய விதத்திலே பிறந்த தினக் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர், தமிழ் மக்களுக்கான தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் குடும்பத்தினர், முன்னாள் போராளிகள் மற்றும் விசேட தேவையுடைய முன்னாள் போராளிகளுக்கான நலத் திட்டங்களை இன்று ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இத்திட்டங்கள் வல்வெட்டி துறையிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்தில் வைத்து ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.