லிபியாவின் மேற்குக் கரையோரத்துக்கு அப்பாலான கடற்பரப்பில் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்ததில், 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 310 பேர் கரையோர பாதுகாப்புப் பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளவர்களில் 200 பேர் திரிபோலி துறைமுகத்துக்கும், 110 பேர் Khums நகரத்துக்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடம் கோரும் நோக்கில், மத்தியதரைக் கடல் வழியாக 3 றப்பர் படகுகளில் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்துள்ளனர். இந்தப் படகுகளிலொன்று மூழ்கியபோது, 31 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் சிறுவர்கள் அதிகளவில் காணப்படுகின்றனர்.
மூழ்கிய படகில் பயணித்த 60 பேரை மாத்திரம் காப்பற்ற முடிந்ததுடன், மற்றைய படகில் பயணித்த 140 பேரையும் காப்பாற்றியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை, மத்தியதரைக் கடலில் மற்றுமொரு மீட்பு நடவடிக்கையாக படகொன்றில் பயணித்த சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளடங்கலாக 110 பேரைக் காப்பாற்றியுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புகலிடம் கோரிச்செல்லும் ஆபிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு, லிபியா பிரதான தளமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.