தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் தமிழர் தாயகப் பகுதியெங்கும் இன்று (ஞாயிற்றுக் கிழமை) எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், ‘தமிழ்த் தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகள் பல்கலைக்கழக வளாகத்தின் பல பாகங்களிலும் ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இராணுவ அடக்குமுறைக்கு உட்பட்டிருந்த கடந்த காலங்களில் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் மாவீரர் வாரம் மற்றும் தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை யாழ். பல்கலைக்கழக சமூகம் எழுச்சியுடன் கொண்டாடியுள்ளது.
இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் மாவீரர் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கான அடக்குமுறைகள் சற்று தளர்ந்திருக்கும் நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.